வெள்ளி பதக்கம் வென்ற மாணவிக்கு. தங்க சங்கிலி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார்.

பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பாரிஸ் பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்ற, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தங்கச் சங்கிலி வழங்கினார்.
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் பாரிஸ் பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்ற, நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி துளசிமதி முருகேசன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, தங்கச் சங்கிலி பரிசாக வழங்கினார். பாரிஸ் பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி துளசிமதி முருகேசன் தெரிவித்தாவது, என் பெயர் துளசிமதி முருகேசன். நான் பாரிஸ் பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என் தந்தை தான் சிறுவயது முதல் என்னை விளையாட்டில் ஊக்குவித்து பயிற்சி அளித்து வந்தார்கள். நான் சிறு வயது முதல் காஞ்சிபுரம் அரசு விளையாட்டு மைதானத்தில் தான் பயிற்சி பெற்றேன். எந்தவொரு தனியார் பயிற்சி மையத்திலும் நான் பயிற்சி பெறவில்லை. நான் அரசின் சலுகைகள் மூலமாகவே இந்த வெற்றியை அடைந்துள்ளேன். இப்போது நான் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3-ஆம் ஆண்டு மருத்துவர் பயின்று வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், விளையாட்டு போட்டிகளில் வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்து என்னை போன்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகின்றார்கள். தற்போது கூட எனக்கு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தி கொள்ளவும், விளையாட்டு உபகரணங்கள் வாங்கவும் ரூ.7.00 இலட்சம் வழங்கினார்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. என்னை போன்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தி ஊக்குவித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களுக்கும், இன்றைய தினம் என்னை வரவேற்று சிறப்பு செய்த பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என மாணவி துளசிமதி முருகேசன் அவர்கள் தெரிவித்தார். பாரிஸ் பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்ற நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி துளசிமதி முருகேசன் (வயது 22) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிறந்தவர். தந்தை .முருகேசன் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். தாய் திருமதி விஜி இல்லத்தரசி. இவரது மூத்த சகோதரி கிருத்திகா கால்நடை மருத்துவம் பயின்றவர். துளசிமதி தனது பள்ளி படிப்பை காஞ்சிபுரம் எம்.எல்.எம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்றவர். இவரது விளையாட்டு ஆர்வம் ஐந்தாம் வகுப்பிலிருந்து தொடங்கியது. தனது விடாமுயற்சியினாலும், தந்தையின் ஊக்கத்தினாலும் பள்ளி பருவத்திலேயே தேசிய அளவிலான இறகுபந்து போட்டியில் 3 முறை பதக்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 4 முறை தங்க பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் 2019- ஆம் ஆண்டு விளையாட்டு பிரிவின் வாயிலாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பாட பிரிவிற்கு விண்ணப்பித்து நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தேர்ந்தெடுத்தார். தனது விளையாட்டு பயணத்திற்காக அயராது பாடுபட்டு தற்போது இவர் கல்லூரி பெண்கள் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.இவர் 2023 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் (எஸ்யு5) பிரிவில் தங்க பதக்கம், இரட்டையர் (எஸ்என்3- எஸ்யு5) பிரிவில் வெள்ளி பதக்கம்,கலப்பு இரட்டையர் (எஸ்என்3- எஸ்யு5) பிரிவில் வெண்கல பதக்கம் வென்றமைக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ரூ.1.00 கோடி காசோலை வழங்கி சிறப்பித்துள்ளார். மேலும் 2023 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வென்று ரூ.1.50 இலட்சம் காசோலை பெற்றுள்ளார். மேலும் இவர் பல்வேறு சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று இந்திய தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்று 2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கும், உபகரணங்கள் வாங்குவதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.7.00 இலட்சம் காசோலையை 01.07.2024 அன்று வழங்கியுள்ளார்கள். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் போட்டிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக 45 நாட்கள் சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. மாணவி துளசிமதி முருகேசன் அவர்கள் பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் (எஸ்யு5) பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற முதல் இந்திய பெண்மணியாக திகழ்வது நம் தேசத்திற்கும், தமிழ்நாட்டிற்கும், மாவட்டத்திற்கும், பல்கலைகழகத்திற்கும், கல்லூரிக்கும், பெருமை சேர்ந்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர் மு.செல்வராஜீ, கல்லூரி பேராசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story