திருத்தணியில் கலெக்டர் வாகனம் பொதுமக்கள் முற்றுகை
திருத்தணியில் கலெக்டர் வாகனம் பொதுமக்கள் முற்றுகை
திருத்தணியில் தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான விவகாரத்தில் இழப்பீடு வழங்க கோரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கலெக்டர் வாகனத்தை தலித் மக்கள் முன்னணி சார்பில் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மை சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் கலந்து கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து கலெக்டர் கிளம்பும்போது, தலித் மக்கள் முன்னணி நிறுவனத் தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் 20க்கும் மேற்பட்டோர், திருத்தணி தீ விபத்தில் பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் நான்கு பேர் பலியானதற்கு வருவாய் துறை சார்பில் இழப்பீட்டை பெற்று தரவும், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அறிக்கையோ இது வரை தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே இழப்பீட்டுத் தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, என்கிட்ட சண்டை போட வந்திருக்கிறீர்களா? எனக் கேட்டவாறு மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் காரில் ஏறி புற்ப்பட்டார். அப்போது கலெக்டர் காரை தலித் மக்கள் முன்னணி சார்பில் முற்றுகையிட முயன்றனர். ஆனால் டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது