பனை விதைகள் நட அரசு அலுவலர் தடை, தன்னார்வலர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார்

பனை விதைகள் நட அரசு அலுவலர் தடை, தன்னார்வலர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார்
குமாரபாளையத்தில் பனை விதைகள் நட அரசு அலுவலர் தடை செய்ததால் தன்னார்வலர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார்
நாமக்கல் மாவட்டம் முழுதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், காவிரி கரையோரப்பகுதி, மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் கரையோரப்பகுதி ஆகிய பகுதிகளில் பனை விதைகள் நட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை பனை விதைகள் நடப்பட்டன. இதில் தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் உள்ள மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் கரையோரப்பகுதியில் விவசாயி மற்றும் தன்னார்வலர் விஸ்வநாதன் மற்றும் நண்பர்கள் பனை விதைகளை நட்டுக்கொண்டிருந்தனர். அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி என்று கூறிய ஒருவர், இங்கு பனை விதைகளை நடக்கூடாது என்று பணிகளை தடுத்துள்ளார். இது குறித்து விஸ்வநாதன் கூறியதாவது: மாவட்ட கலெக்டர் உத்திரவின்படி ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிகளின் ஒரு கட்டமாக நாங்கள் பனை விதைகளை நடும் பணியை செய்து கொண்டிருந்தோம். அப்போது குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி என்று கூறிகொண்ட அதிகாரி ஒருவர், வாய்க்கால் கரையில் பனை விதைகளை நடக்கூடாது என்றார். மாவட்ட கலெக்டர் வாய்க்கால் கரையோரம் பனை விதைகள் நட அனுமதி கொடுத்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு அதிகாரியை தலைமை வகிக்க செய்து, பெயர் பட்டியலை கூட கலெக்டர் வெளியிட்டுள்ளார். அப்படியிருக்க கலெக்டர் அனுமதி கொடுத்த இடத்தில், பனை விதை நடக்கூடாது, என்று சொல்ல இவர் யார்? இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது? தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் செயல்பட்டு வருகிறார். ஆனால் இது போன்ற நபர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். இது குறித்து மாவட்ட கலெக்டர் வசம் புகார் தெரிவித்து உள்ளோம். மன உளைச்சலை ஏற்படுத்திய இவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story