திருச்செந்தூர் கோவிலில் புரட்டாசி பவுர்ணமி வழிபாடு!
Thoothukudi King 24x7 |18 Sep 2024 3:34 AM GMT
புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்து வழிபட்டனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தோறும் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி தினத்தன்று கோவில் கடற்கரையில் தங்கி வழிபாடு செய்துவிட்டு, மறுநாள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள்s நிறுத்தப்பட்டிருந்தன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story