கிராம வளமை விரிவாக்கத் திட்டம் விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, தலைமையில் கிராம வளமை விரிவாக்க திட்டம் 2024 – 2025 விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருச்செங்கோடு, கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில் இன்று கிராம வளமை விரிவாக்க திட்டம் 2024 – 2025 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கிராம வளமை விரிவாக்க திட்டம் குறித்து ஒன்றிய குழு தலவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விளக்கக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கருந்தரங்கில் எலச்சிபாளையம், மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், கபிலர்மலை, பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர்கள், சுமார் 161 கிராம ஊராட்சிகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். எந்தவொரு அரசு திட்டமாக இருந்தாலும் அடிப்படையிலிருந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கிராமத்திலிருந்து செயல்படுத்தும் போது தான் அத்திட்டம் வெற்றி பெறும். அந்த வகையில் மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள் தான். கிராம அளவில் உள்ள நீங்கள் அனைவரும் தான் ஒரு கிராமத்தை நல்ல முறையில் வழிநடத்திட முடியும். மேலும், ஒரு குடும்பத்தின் நிலை, பள்ளி இடைநின்ற குழந்தைகள், குடும்பத்தின் அடிப்படை தேவை, எடை குறைவான கர்ப்பிணித்தாய்மார்கள் என அனைத்தையும் கண்காணித்து முறைபடுத்த வேண்டியது நம் கடமை.நாமக்கல் மாவட்டம் கல்வி மாவட்டம் ஆகும். சுமார் 141 கல்லூரிகள் நம் மாவட்டத்தில் உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை கடந்து தான் பெற்றோர்கள் அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கின்றார்கள். அரசு பள்ளி ஆசிரியர்கள் அக்குழந்தைகளை நல்வழிப்படுத்தி அவர்களை சமுதாயத்தில் உயர்நிலை அடைய அயராது பாடுபட்டு வருகின்றார்கள். 18 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு கட்டாயம் திருமணம் செய்திட கூடாது. குழந்தை திருமணம் அவர்களின் மன நிலை, உடல் நிலையை பாதிக்க செய்கிறது. இதுபோன்ற செயல்பாடுகளை கட்டாயம் கண்காணித்து தடுத்திட நீங்கள் ஒத்துழைப்பு அழிக்க வேண்டும். குழந்தை திருமணங்களை தடுத்திட 1098 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்து அக்குழந்தையை பாதுகாத்திட முடியும். மேலும், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களின் தரவுகளை பராமரிக்க வேண்டும். கர்ப்பிணித்தாய்மார்களின் உடல்நிலை ஆரோக்கியம் கண்காணிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தேவையான அனைத்து நவீன வசதிகளும் உள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு மருத்துவர்கள் அனைத்து சிக்கலான நிலைகளிலும் நோயாளியை சிகிச்சை அளித்து காக்கும் திறமை மிக்கவர்கள். தமிழ்நாடு அரசு அனைத்து ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்ற உயர் நோக்கில் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் திருச்செங்கோட்டிலும், ரூ.56.00 கோடி மதிப்பீட்டில் இராசிபுரத்திலும், ரூ.23.00 கோடி மதிப்பீட்டில் பரமத்தியிலும் நவீன வசதிகளுடன் மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஓராண்டிற்கு சுமார் 20,000 பிரசவங்கள் நடைபெற்று வருகிறது. பிரசவத்தின் போது தாய்சேய் நலன் காக்க அவர்களின் ஆரோக்கியத்தில் நீங்கள் அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் செயலாற்றிட வேண்டும். தங்கள் கிராமங்களில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் உபயோகியத்தை தடுத்திட வேண்டும். பள்ளி வளாகத்திலிருந்து 100 மீ தொலைவிற்கு போதை பொருட்களின் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்த புகார்களை 88383 52334 மற்றும் 10583 உள்ளிட்ட எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திட நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 5 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தொழில்முனைவோர்களை உருவாக்கிட அரசு சார்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க நம் மாவட்டத்தில் 10 கால்நடை சிகிச்சை அவசர ஊர்திகள் செயல்பட்டு வருகிறது. ஊராட்சி தலைவர்கள் தங்கள் கிராமத்தை அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து நல்ல முறையில் வழிநடத்திட வேண்டும். அரசின் நிதி ஒக்கீட்டை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வேண்டும். எனவே, அரசின் திட்டங்கள் அனைத்தும் பயன்படுத்தி கொண்டு தங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் தூய்மையே சேவை 2024 – சுகாதார உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, ஊராட்சி செயலாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story