மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கல்லூரி சந்தையினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், கல்லூரி சந்தையினை (COLLEGE BAZAAR) தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், கல்லூரி சந்தையினை (COLLEGE BAZAAR) தொடங்கி வைத்து பார்வையிட்டார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பெண்களின் பொருளாதார மேம்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களின் தரத்தினை மேம்படுத்தி விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன் கல்லூரிகளில் கல்லூரி சந்தை (College Bazzar) நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி சந்தையில் குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை இளைஞர்கள் மத்தியில் காட்சிப்படுத்துவதன் மூலமாக இளம் தலைமுறையினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி விற்பனையினை அதிகப்படுத்திட உதவுகின்றது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை நவீன சந்தைப்படுத்துதல் (Digital Marketing) மற்றும் தரம் உயர்த்துதல் (Value addition) தொடர்பான கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதன் மூலமாக உற்பத்தி மற்றும் பொருட்களின் தரம் உயர்கிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைகிறது. அதன் அடிப்படையில் 2024-2025 ஆண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு 6 கல்லூரி சந்தைகள் நடத்த இலக்கு வரப்பெற்றுள்ளதை அடிப்படையாக கொண்டு கல்லூரி சந்தையானது திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. முன்னதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில், முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனங்கள் தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன், கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரிகளின் துணை முதல்வர் முனைவர்.ஜி.கார்த்திகேயன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story