மின் மீட்டர் பொருத்தவோ மாற்றவோ எவரேனும் பணம் கேட்டால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்

மின் மீட்டர் பொருத்தவோ மாற்றவோ எவரேனும் பணம் கேட்டால் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
செயற்பொறியாளர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்களுக்கு தங்களுடைய மின்இணைப்புகளின் மூலம் மின்வாரியம் சாராத சில நபர்களால் தவறுகள் நடைபெறாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தாங்கள் புதிய மின் இணைப்பு வேண்டி இணையதளம் மூலம் விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் மின்வாரிய ஊழியர்கள் அல்லது ஊழியர்கள் அல்லாத வெளிநபர் எவரேனும் தங்களிடம் வந்து தங்களது இல்லத்தில் மின்மீட்டர் பொருத்துவதாக கூறி பணம் ஏதேனும் கேட்டாலோ, தங்களது மின்மீட்டர் பழுதடைந்துள்ளது அதனை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என பணம் கேட்டாலோ, வேறு ஏதேனும் காரணங்கள் கூறி தங்களுடைய மின்மீட்டரினை மாற்றம் செய்திட பணம் ஏதும் கேட்டாலோ யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம்.தங்களின் இடத்திற்கு வந்திருக்கும் நபர் மின்வாரியத்தை சார்ந்தவர்தானா என உரிய மின்வாரிய பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். தங்களுடைய மின்கட்டணம் குறைப்பதற்காக என கூறி மின்மீட்டர் பழுது பார்ப்பதாகவோ அல்லது மாற்றம் செய்வதாகவோ பணம் ஏதேனும் கேட்டால் தரவேண்டாம். மின்வாரியத்தில் அவ்வாறு கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. தங்களுடைய மின் இணைப்பில் மின் வாரியத்தின் அனுமதி இல்லாமல் எவ்வித பராமரிப்பும் பழுதும் மேற்கொள்ள வேண்டாம். புதிய மின்இணைப்பு, மின்இணைப்பு பெயர்மாற்றம் மற்றும் இதர மதிப்பீட்டுக் கட்டணங்கள் ஆகிய அனைத்தும் மின்வாரிய இணையதளம் வழியாக மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே மின்நுகர்வோர் யாரும் தனிநபர் எவரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். மின்நுகர்வோர்கள் மின் கட்டணத்தை மின்வாரிய இணையதளம் வழியாகவோ அல்லது பரிவு அலுவலகத்தில் நேரடியாக கட்டலாம். இவ்வாறு விருத்தாசலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story