மினி லாரியில் பெட்ரோல் இல்லாதது போல் நடித்து ஆடுகளை திருடிய நூதன சம்பவம்

மினி லாரியில் பெட்ரோல் இல்லாதது போல் நடித்து ஆடுகளை திருடிய நூதன சம்பவம்
விருத்தாசலம் அருகே ஆட்டுக் கிடையில் புகுந்து உரிமையாளரை கட்டிப்போட்டு தாக்கி விட்டு 21 ஆடுகள் திருட்டு
விருத்தாசலம் அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்ஜிஆர் என்ற ராமச்சந்திரன் (வயது 60). இவர் தன்னுடைய ஆடுகள் மற்றும் இவருடைய நண்பர்கள் இருவரது ஆடுகள் என மொத்தம் 300 ஆடுகளை அப்பகுதியில் மேய்த்து விட்டு கீரமங்கலம் -தேவங்குடி செல்லும் சாலையில் உள்ள விவசாய விளை நிலத்தில் கிடை போட்டுவிட்டு இரவு விவசாய விளைநிலத்திலேயே ஆடுகளுக்கு காவலாக தங்கி இருந்தார். நள்ளிரவில் அங்கு மினி லாரி ஒன்று வந்து நின்றுள்ளது. அப்போது லாரி சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவர் மினி லாரி நின்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு நான்கு பேர் லாரியை விட்டு இறங்கி நின்று கொண்டிருந்தனர். ஏன் இங்கே நிற்கிறீர்கள் என ராமச்சந்திரன் கேட்டுள்ளார். அதற்கு லாரியில் பெட்ரோல் இல்லை. அதனால் நிற்கிறோம் என அந்த மர்ம நபர்கள் கூறியுள்ளனர். அதனால் மீண்டும் சென்று ராமச்சந்திரன் படுத்துவிட்டார். இந்நிலையில் அந்த 4 பேரும் அவர்களுக்குள் சண்டை போடுவது போல் நடித்துள்ளனர். இதனால் ராமச்சந்திரன் மீண்டும் எழுந்து சென்று அவர்களுடைய சண்டையை விலக்கி விட்டுள்ளார். அப்போது அவர்கள் ராமச்சந்திரனிடம் தண்ணீர் கேட்டுள்ளனர். ராமச்சந்திரன் தண்ணீரை எடுத்து வந்து கொடுக்கும்போது அவரது பின்னால் சென்ற இரண்டு பேர் திடீரென அவரது முகத்தில் துணியை போட்டு மூடி அவரை சரமாரியாக சுற்றி தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி விழுந்தார். உடன் அங்கிருந்தவர்கள் ஆட்டு கயிற்றால் ராமச்சந்திரனின் கைகளை கட்டி போட்டுவிட்டு அந்த மர்ம கும்பல் திடீரென ஆட்டுக் கிடைக்குள் புகுந்து, 21 ஆடுகளை திருடி மினி லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர். காலையில் அப்பகுதி வழியாக சென்றவர்கள் தாக்குதலுக்கு உள்ளான ராமச்சந்திரனை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் கிடைத்து விரைந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மினி லாரியில் வந்து ஆடுகளை திருடி சென்ற மர்ம கும்பல் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சாத்துக் கூடல் கீழ்பாதி கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 ஆடுகளை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கருவேப்பிலங்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நேற்று முன்தினம் 2 பேரையும் கைது செய்த நிலையில், அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு காவனூரில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story