பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம்!
Thoothukudi King 24x7 |20 Sep 2024 9:04 AM GMT
எட்டயபுரம் அருகே பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 45 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 3 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் பள்ளியில் படிக்கும் 7 மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்றதாகவும், அவர்களை அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டயபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் ேபரில் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் பள்ளிக்கூடத்திற்கு சென்று மாணவர்கள், ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்கள். ஆனால் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், மாணவர்கள் மீதான நல்லெண்ணத்தில் தான் அவர்களை அடித்தேன் என்று தெரிவித்தார். இருந்தபோதிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நாயகம், துறை ரீதியான நடவடிக்கை எடுத்து ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் ராதிகா கூறுகையில், ‘பெற்றோர்களுடன் கண்மாய்க்கு குளிக்க சென்ற என்னுடைய குழந்தைகள் உள்பட 7 மாணவர்களை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், கடுமையாக தாக்கியுள்ளார். அவரை பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியில் நிரந்தரமாக தலைமை ஆசிரியர் இல்லை. இதுகுறித்து பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story