சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்த விவசாயிகள் பயிற்சி;

சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்த விவசாயிகள் பயிற்சி;
மல்லசமுத்திரம் வட்டாரத்தில் சூரிய ஆற்றல் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
மல்லசமுத்திரம் அருகேயுள்ள, தனியார் வேளாண் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் நேற்று, அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் சூரிய ஆற்றல் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் தலைமை வகித்து, சூரிய சக்தி பயன்கள் மற்றும் வேளாண்மைத்துறை மானியத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் வெங்கடாலம் கலந்துகொண்டு சூரிய ஆற்றல் வேளாண்மைத்துறை மற்றும் இதர துறைகளில் பயன்படுத்தப்படும் விதம் பற்றி எடுத்துரைத்தார். சூரிய ஆற்றலானது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு மாற்றாக சிறந்த முறையில் பயன்படுகிறது. சோலார் விவசாயத்தில் நீர் பாய்ச்ச மின்சார செலவினத்ததை குறைத்திடவும், வயல்களில் பூச்சி நோய் கண்காணிப்பிற்காக சூரிய விளக்குப்பொறி பயன்படுத்துதல், சோலார் சக்தியின் மூலம் வேளாண் விளைபொருட்களை உலர்த்தும்போது 80% விரைவில் உலரவைக்கமுடியும், வீடுகளில் தண்ணீர் சூடுபடுத்துதல், மற்றும் தொழிற்சாலைகளில் மின்சார சிக்கனத்திற்காகவும் பயன்படுத்துதல் பற்றி விளக்கமளித்தார். மேலும் தனது வடிவமைப்பான சோலார் டனல் டிரையர் பற்றி எடுத்தரைத்ததுடன் வீடியோவில் காண்பித்தார். வேளாண் பொறியியல்துறை உதவி பொறியாளர் தங்கராசு அவர்கள் தங்களது துறையின் மூலம் வழங்கப்படும் மானியத்திட்டங்கள் பற்றியும், வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடுதல் மற்றும் வாடகை விபரங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். விவசாயிகள், வேளாண் பொறியியல்துறை பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். பயிற்சியின் இறுதியில் அட்மாதிட்ட அலுவலர் நன்றியுரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story