விருத்தாசலத்தில் ரயில் முன் பாய்ந்து காய்கறி வியாபாரி தற்கொலை
Virudhachalam King 24x7 |20 Sep 2024 12:11 PM GMT
காரணம் என்ன போலீசார் விசாரணை
விருத்தாசலம், செப்.21- சென்னையில் இருந்து விருத்தாசலம் வழியாக கொல்லம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 9 மணி அளவில் விருத்தாசலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது விருத்தாசலத்தில் இருந்து சென்னை மார்க்கம் வழியில் பூவனூர் ரயில் நிலையம் அருகே ரயிலில் ஒருவர் அடிபட்டு இறந்துள்ளதாக ரயில் என்ஜின் டிரைவர் விருத்தாசலம் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து விட்டு சென்றனர். அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் பூவனூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளம் பகுதிகளில் சென்று தேடினர். அப்போது பூவனூர் ரயில் நிலையத்திற்கு 200 மீட்டர் தொலைவில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவரின் உடல் சிதறி கிடந்ததை கண்டறிந்தனர். பின்பு அருகில் ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதனை எடுத்து ஆய்வு செய்தபோது சிறிது நேரத்தில் அதில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதன் அடிப்படையில் அடிபட்டு இருந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த துரைசாமி மகன் வெள்ளைச்சாமி (33) என்பதும், இவர் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் விருத்தாசலம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் எதுவும் இல்லை. இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து பூவனூர் வரை சென்று அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாளத்தில் நடந்து சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, வெள்ளைச்சாமி ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story