“போதை இல்லா தமிழ்நாடு“ என்ற விழிப்புணர்வு குறும்படம்
Dindigul King 24x7 |20 Sep 2024 1:02 PM GMT
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் “போதை இல்லா தமிழ்நாடு“ என்ற விழிப்புணர்வு குறும்படம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே “போதை இல்லா தமிழ்நாடு“ என்ற நிலையை உருவாக்கிட போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. திண்டுக்கல் ஜிடிஎன் கல்லுாரியில் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சியை உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து திண்டுக்கல் ஜெயின்பால்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் குறும்பட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மது உள்ளிட்ட போதை பொருட்கள் உபயோகிப்பதனால், மன ரீதியாக துாக்கமின்மை, மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி, ஆளுமைத்தன்மை, மாற்றங்கள், ஞாபகமறதி, வலிப்பு நோய், மாயத்தோற்றங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதுடன், உடல் ரீதியாக கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை, கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப்புண், கணையத்தில் வீக்கம். வாய் புற்றுநோய், தொண்டை உணவுக்குழாய் மற்றும் குடல் சத்துக் குறைபாடுகள், உடல் வீக்கம், நீரிழிவு நோய், இருதய வீக்கம், கை, கால் செயல் இழத்தல், நரம்புத்தளர்ச்சி, மூளை பாதிப்புகள், மலட்டுத்தன்மை, கருச்சிதைவு, இரத்த சோகை, ஆண்மையிழப்பு, கண் பார்வை பாதிப்பு, போன்ற பிரச்சனைகளும், சமுதாயத்தில் கணவன், மனைவி இடையே சண்டை சச்சரவுகள், விவாகரத்து, குடும்பத்தில் அக்கறையின்மை, வேலை செய்ய இயலாமை, வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, பொருளாதாரப் பிரச்சனைகள், கடனாளி ஆகுதல், அதிக செலவு செய்தல், ஏளனப் பேச்சுக்கள், மரியாதை குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு, உறவினர் சுற்றத்தாரின் வெறுப்புகளுக்கு ஆளாக நேரிடுவதுடன், குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயரை ஏற்படுத்தி குழந்தைகளின் முன்னேற்றத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. போதைப்பொருள் பழக்கம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே ஏற்படும் இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பாதிக்கப்படுவதனால், அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் மற்றும் சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே, போதைப்பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைதோறும் “போதை இல்லா தமிழ்நாடு“ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில், ஏராளமான மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு அடைந்தனர்.
Next Story