விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர் மனைவியுடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

X
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் சத்தியவாடி கிராமத்தில் தூய்மை பணியாளராக கடந்த 12 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் உள்ளிட்ட 5 ஊராட்சி பணியாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை என ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் வேல்முருகனுக்கு மட்டும் ஊராட்சி பணி வழங்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வேல்முருகன், தனது மனைவி நிர்மலா என்பவருடன் விருத்தாச்சலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தங்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த விருத்தாச்சலம் போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தி விருத்தாச்சலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்குதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

