சிவகங்கை அருகே குடிநீரால் சிறுவர்களுக்கு பற்களில் கறை படிவதால் வேதனை
Sivagangai King 24x7 |21 Sep 2024 7:11 AM GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே குடிநீரால் சிறுவர்களுக்கு பற்களில் கறை படிந்து வருவதால் தீர்வு தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை அடுத்து அரசனிமுத்துப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது நெம்மேனி கிராமமம். இங்கு 60-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு ஆழ்த்துளை கிணறு அமைத்து, சிறிய தொட்டி மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் காலப்போக்கில் புளோரைடு அதிகரித்து தண்ணீர் சற்று உவர்ப்பாக மாறியது. எனினும் அக்கிராமத்துக்கு வேறு குடிநீர் ஆதாரங்கள் இல்லாததால், புளோரைடு அதிகமுள்ள நீரையை தொடர்ந்து குடித்து வருகின்றனர். இதனால் சிறுவர்களின் பற்களில் கறை படித்து வருகிறது. இந்த பிரச்சினையால் இதுவரை 15-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் சிலருக்கு எலும்பு பாதிப்பும் இருந்து வருகிறது. இதையடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், ஒன்றிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். நடவடிக்கை இல்லாததால் அவர்கள் தொடர்ந்து புளோரைடு அதிகமுள்ள நீரையே குடித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் கூறியதாவது: சிறுவர்களுக்கு பற்களில் கறை படிவு உள்ளது. இதனால் அவர்கள் பள்ளிகளுக்கு செல்லவே கூச்சப்படுகின்றனர். சிலருக்கு எலும்பு பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இப்பிரச்சினையை தவிர்க்க ஊருணி நீரை குடித்தோம். அப்போது குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்தது. இதனால் அதை குடிக்க வேண்டாம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறிவிட்டனர். இதனால் வேறுவழியின்றி புளோரைடு அதிகமுள்ள நீரையே குடித்து வருகிறோம். மேலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்’ என்றார்.
Next Story