வேளாண்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை: ஆட்சியர்
Thoothukudi King 24x7 |21 Sep 2024 9:56 AM GMT
வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் இடுபொருட்களை விவசாயிகள் பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பயன்பெற மின்னணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை துவங்கிட தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 2023 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலுள்ள வட்டார முதன்மை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விற்பனை முனைய கருவி (POS இயந்திரம்) அரசால் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு பணமில்லா பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, நமது மாவட்டத்தில் பயிர் சாகுபடி பருவகாலம் துவங்கப்பட உள்ள நிலையில் நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை ஏடிஎம் கார்டு (ATM Card) மற்றும் மின்னணு வசதிகள் கொண்ட பணம் இல்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் (Gpay / Phonepe / UPI / Net Banking / QR Code) அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் விற்பனை முனைய கருவி (POS Machine) வழங்கப்பட்டு அதனை உபயோகப்படுவதற்கான பயிற்சியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாய பெருமக்கள் இடுபொருட்களுக்கான முழுத்தொகை அல்லது பங்களிப்பு தொகையினை ஏடிஎம் கார்டு அல்லது கூகுள்பே அல்லது போன்பே மூலமாக செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Next Story