பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு
Thoothukudi King 24x7 |21 Sep 2024 10:12 AM GMT
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்க பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் பூஜைகளை நடத்தினார். பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, பாலசந்தர், முருகேஸ்வரி, ஜெயபால் ஆகியோர் செய்து இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரிசையாக செல்வதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story