நாமக்கல்லில் நடைபெற்ற சிலப்பதிகாரப் பெருவிழாவில் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு, சிலம்பொலியார் விருது (முதல் விருது) மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும், இளங்கோ விருது மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழி தமிழறிஞர் கலியபெருமாளுக்கும்,சிலம்பொலியார் மாணவர் விருது மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி சென்னையைச் சேர்ந்த மாணவி சி.ஜாஸ்மின் ரிஸ்வாவுக்கு வழங்கப்பட்டது
நாமக்கல்லில், சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் 95–ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நாமக்கல் அருகே சிவியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன். கடந்த 1928 செப்டம்பர் 24–இல் பிறந்த அவர் 2019 ஏப்ரல் 6–இல் காலமானார். அவரது நினைவாக, நாமக்கல்–சேந்தமங்கலம் சாலை அவரது சிவியாம்பாளையத்தில் முழுஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நூலகம் மற்றும் அவர் பெற்ற விருதுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவருடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடும் பொருட்டு, சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரப் பெருவிழா மற்றும் சிலம்பொலியார் 95–ஆவது பிறந்த நாள் விழாவில் நாமக்கல் கொங்கு நாட்டு வேளாளர் சங்க தலைவர் பி.கே.வெங்கடாசலம் வரவேற்று பேசினார்.பிஜிபி குழும தலைவர் பழனி ஜி.பெரியசாமி தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் புகழ் வணக்க உரையாற்றினார். கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு, ‘சிலம்பொலியார் விருது’(முதல் விருது) மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழியும், ‘இளங்கோ விருது’ மற்றும் ரூ.50 ஆயிரம் பொற்கிழி தமிழறிஞர் கலியபெருமாளுக்கும், ‘சிலம்பொலியார் மாணவர் விருது’ மற்றும் ரூ.10 ஆயிரம் பொற்கிழி சென்னையைச் சேர்ந்த மாணவி சி.ஜாஸ்மின் ரிஸ்வானாக்கும் வழங்கப்பட்டது.
இதில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் பெற்ற ரூ.50 ஆயிரம் பொற்கிழியை சிலம்பொலி செல்லப்பன் அறக்கட்டளைக்கே வழங்கினார்.
‘சிலம்புச் செம்மல்’ தமிழமுதன் சிலப்பதிகாரம் குறித்து பேசினார்.சிலம்பொலியார் குறித்து அரங்க ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். சிலம்பொலியாளர் அறக்கட்டளையின் பணிகள் குறித்து அதன் செயலாளர் மணிமேகலைபுட்பராசு பேசினார். இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், நாமக்கல் முன்னாள் எம்பி, ஏ.கே.பி.சின்ராஜ், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நாமக்கல் தமிழ் சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேல், காவேரி பீட்ஸ் டாக்டர் பி.வி. செந்தில் ஆகியோர் பங்கேற்றனர் .விழா நிறைவில், அறக்கட்டளை தலைவர் செ.கொங்குவேள் நன்றி கூறினார். இந்த நிகழ்வில் தமிழறிஞர்களும், பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
Next Story