ஆட்சியர் அலுவலகம் அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாயார் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் வேகவதி ஆறு அருகே மிகப்பெரிய தாயார் குளம் அமைந்துள்ளது இந்த குளத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு அருகே பொதுமக்கள் தங்களது உயிரிழந்த முன்னோர்களுக்கு அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தாயார் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
திடீரென ஏராளமான மீன்கள் செத்து மதிப்பதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருவதாக குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்களின் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட தாயார் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.