போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு
Komarapalayam (Pallipalayam) King 24x7 |23 Sep 2024 1:05 PM GMT
பாலியல் புகாருக்கு ஆளான ஆசிரியரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதாக பொதுமக்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
பள்ளிபாளையம் அடுத்த அலமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவர் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கடந்த சனிக்கிழமை அன்று அலமேடு பகுதியில் அரசு விழாவில் பங்கேற்க வந்திருந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர். புகாரின் அடிப்படையில் திங்களன்று மாவட்ட கல்வி அதிகாரி ரவி செல்வம், வட்டார கல்வி அதிகாரி காமாட்சி, குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் ஆகியோர் பள்ளியில் விசாரணையை தொடங்கினர். தொடங்கப்பட்ட விசாரணையின் முழு அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியரிடம் வழங்கப்பட்டு, அதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை என்றும் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாலை பள்ளி முடிந்தவுடன் பொறுப்பு தலைமை ஆசிரியரை போலீசார் பாதுகாப்புடன் கூட்டிச்சென்றதை பார்த்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கொந்தளித்து அங்கு பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. குற்றம் சுமத்தப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போலீஸுடன் வாக்குவாதம் ஈடுபட்டனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் புகார் தொடர்பாக தொடர் விசாரணை நடக்க உள்ளதாகவும் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சமரசம் செய்து தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story