தனி நபர் கிரையம் பெற்ற இடத்திற்கு கூட்டு பட்டா

தனி நபர் கிரையம் பெற்ற இடத்திற்கு கூட்டு பட்டா
கணக்கில் ஏற்றிய விஏஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி கோட்டாட்சியரிடம் மனு
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சத்தியசீலன். இவர் 1978 ஆம் ஆண்டு கர்நத்தம் கிராமத்தில் 6 சென்ட் இடத்தை வாங்கி கிரையம் பெற்றுள்ளார். அதில் திருமணமாகாத தன் தம்பிகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையில் இவருக்கு என்எல்சியில் வேலை கிடைத்து நெய்வேலியில் தங்கி இருந்த நிலையில் தற்போது என்எல்சியிலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் தனது சொந்த கிராமத்திற்கு வந்துவிட்டார். இதனால் தற்போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா கேட்டு விருத்தாசலம் வருவாய் துறை நிர்வாகத்தில் மனு செய்த நிலையில் கர்நத்தம் விஏஓ மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உதவியாளர் இருவரும் சேர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் சேரும்படி கூட்டு பட்டாவாக தயார் செய்து முடித்துள்ளனர். இதனை கூட்டு பட்டாவில் இருந்து நீக்கி தனி பட்டாவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சத்தியசீலன் நேற்று இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை தலைமையில் அக்கட்சியினருடன் விருத்தாசலம் கோட்டாட்சியர் சையத் மெக்மூத் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் எனது சொந்த உழைப்பில் நான் வாங்கிய எனது 6 சென்ட் இடத்திற்கு என் குடும்பத்தார் அனைவரும் பெயரையும் சேர்த்து பட்டா கொடுப்பதை நிறுத்த வேண்டும். பட்டா கேட்டு பல வருடங்களாக போராடிவரும் என்னை பழி வாங்கும் நோக்கில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் முன்னாள் கிராம உதவியாளர் இருவரும் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த மனு மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட விஏஓ மற்றும் முன்னாள் கிராம உதவியாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் சையத் மெக்மூத் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர்கள் மனு அளித்து விட்டு சென்றனர். இதில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story