ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் முற்றுகை : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
Thoothukudi King 24x7 |24 Sep 2024 8:54 AM GMT
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மாவட்டம் முழுவதும் 85 ஆண், பெண் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைத்து துறைகளிலும் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய மற்றும் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பணிபுரிந்து இறக்கும் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னா், அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் "அனைத்து துறை அலுவலக வேலைகளையும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பணியாளா்கள் மீது சுமத்துவதை தவிா்க்க வேண்டும். ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பணி செய்ய நிா்பந்திக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தக்கூடாது. ஊராட்சி துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். விடுமுறை நாள்களில் பணியாளா்களை பணிக்கு அழைத்து சிரமப்படுத்தக்கூடாது. முதல்வரின் காலை உணவு திட்டம் சம்பந்தமான பதிவேடுகளை சத்துணவு துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மூலம் பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினா். அதைத் தொடா்ந்து அவா்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
Next Story