ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் கட்ட மாற்று இடம் தேர்வு!

ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் கட்ட  மாற்று இடம் தேர்வு!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு உள்ளேயே மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டுவதற்காக, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான் காலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட அரண்மனையில் தான் தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. குறைந்த அளவிலான நிதியைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு இந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி அருங்காட்சியகத்துடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2022 ஜூன் 22-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே, வடகிழக்குப் பகுதியில் 35 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்தும், ரூ.3.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பகுதியில், தென்கிழக்குப் பகுதியில் (பிஎல்ஏ ரவுண்டானா) கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாக்குழுவினர் கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில், தென்கிழக்குப் பகுதியிலேயே மணிமண்டபத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த மரங்கள் கடந்த இரு நாள்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் ஓரிரு நாள்களில் நிறைவுபெற்றவுடன், மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story