சேந்தமங்கலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமையான தெப்பக்குளத்தை சீரமைக்க கோரி சட்டசபை பொது கணக்கு குழு தலைவரிடம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை மனு!

நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி, சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கோரிக்கை மனு அளித்தார்.
தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தலைமையில், பொது கணக்குக்குழுவினர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி, சட்டசபை பொது கணக்குக்குழு தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அளித்துள்ள, கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், அருள்மிகு நைனாமலை வரதராஜ பெருமாள் வகையறா திருக்கோயிலான சவுந்தரவல்லி அம்பாள் உடனுறை சோமேஸ்வரர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஆகியவை அமைந்துள்ளன. சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டில், சிவாலயம் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேடுடன் நோய் பரப்பும் வகையில் உள்ளது. உப திருக்கோயில்களின் முதன்மையான உற்சவமாகிய மாசி மக திருத்தேர் விழாவின் போது, மாசி மாத பவுர்ணமி அன்று திருமண வைபவம் முடிந்தவுடன், குதிரை வாகனத்தில் சிவபெருமான் மற்றும் வரதராஜ பெருமாள் ஆகிய தெய்வங்கள் இந்த தெப்பக்குளம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அப்போது சிறப்பான வான வேடிக்கை நடப்பது வழக்கமான ஒன்றாகும். தற்போது, டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக தெப்பக்குளத்தில் கலக்கிறது. இதனால் திருக்கோயிலின் தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழமையான திருக்கோயில் தெப்பக்குளம் தற்போது சுகாதார சீர்கேடு மேலோங்கி, நோய் பரப்பும் வகையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் உள்ளது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.திருக்கோயிலின் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதோடு இல்லாமல், பெருமளவு கழிவுப் பொருட்களும் சேர்ந்துள்ளது. கழிவுநீர் தொடர்ந்து தேக்கப்பட்டு வருவதால் இந்தப் பகுதியை சுற்றியுள்ள உள்ள நிலத்தடி நீரின் தன்மையும் கொட்டுப்போய் உள்ளது. இது விவசாயத்திற்கும் மற்றும் கால்நடை வளர்ப்புக்கும் தகுதியற்ற நீராக மாறுவதற்கான அபாயம் உள்ளது.தமிழ்நாடு அரசு இந்து சமய ஆட்சி துறையினர் இந்த திருக்குளம் கோயில் நிர்வாகத்தின் கீழ் இல்லை என்பதை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான கோப்புகள் சென்னை TUFIDCO அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சீரழிந்த தெப்பக்குளத்தினை மத்திய மாநில அரசின் மூலம் தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கி, படித்துறை, பூங்கா மற்றும் இதர அடிப்படை கட்டமைப்புகளுடன் தெப்பக்குளத்தை விரைந்து சீர்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட பொது கணக்கு குழுவினர் சேந்தமங்கலம் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தனர், பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதற்கான நிதி ஆதாரத்தை கணக்கிட்டு உடனடியாக தெப்பக்குளத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு பிறப்பித்தனர், கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணியை துரிதப்படுத்திய தமிழக சட்டபேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
Next Story