கிராம மக்கள் போராட்டத்தால் பரபரப்பு
Thirukoilure King 24x7 |27 Sep 2024 3:55 AM GMT
பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் திருவிழாவின்போது அருகே உள்ள இடத்தில் சுவாமி சிலைகளை அலங்காரம் செய்து ஊர்வலம் நடத்துவது வழக்கம். அங்குள்ள இரண்டரை செண்ட் இடத்தில் கிராம மக்கள் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் மண்டபம் கட்டி சுவாமி சிலைகள் வைத்து வழிபட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், கோவில் மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது. அதற்கு பட்டா வாங்கியுள்ளதால் திருவிழா நடத்தக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக போலீசார், வருவாய்த் துறையினர் திருவிழாவின் போது கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிக தீர்வு கண்டு வந்தனர். இந்நிலையில் தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மண்டபம் கட்டப்பட்டுள்ள இடம் தனக்கு சொந்தமானது என உத்தரவு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவில் மண்டபத்தை இடிக்க நேற்று அதிகாரிகள் ஆயுத்த பணிகளில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் மண்டபம் கட்டப்பட்டுள்ள இடத்தில் திரண்டனர். கிராம மக்கள் கோவில் மண்டபத்தை இடிக்க கூடாது எனக் கூறி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களின் கடும் எதிர்ப்பால் போலீசார் மற்றும் அதிகாரிகள் கோவில் மண்டபம் இடிக்கும் முயற்சியை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாகவும், 45 நாட்கள் அவகாசம் வழங்கினர்.
Next Story