ஆண்டிபட்டியில் நகைக்கடையை திருட முயற்சி செய்த திருடர்கள்
Andippatti King 24x7 |27 Sep 2024 11:12 AM GMT
சுரேஷ் என்பவர் ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் கடந்த 15ம் தேதி புதிய நகைக்கடை திறந்தார். கடையில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பு இருந்தது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (40).இவர் ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகக் கட்டிடத்தில் கடந்த 15ம் தேதி புதிய நகைக்கடை திறந்தார். கடையில் ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பு இருந்தது. நேற்று முன்தினம் இரவு கடையின் உரிமையாளர் சுரேஷ், கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நகைக்கடையை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் கடையின் பின்புறம் சென்று சுவரில் கடப்பாரையைக் கொண்டு துளையிட்டு உள்ளனர். இந்த சத்தம் கேட்டு பக்கத்து கடையில் தூங்கிய முதியவர் ஒருவர், ஆண்டிபட்டி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.அவர்கள் வருவதைப் பார்த்த மர்ம நபர்கள், பின்புறம் உள்ள மாடி வழியாக தப்பிச் சென்றனர். இதனால் கடையில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பின. தடயவியல் நிபுணர்கள் நகைக்கடையில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிசி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
Next Story