தனியார் நூற்பாலையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
Komarapalayam King 24x7 |28 Sep 2024 12:33 PM GMT
குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சமூக நல கல்வி சேவை குழு நிறுவனர் கவுசல்யா, நாமக்கல் மாவட்டம் சகி ஒருங்கிணைந்த சேவை மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் ஸ்ரீவித்யாம்பிகை தலைமை வகித்தனர். ஸ்ரீவித்யாம்பிகை பேசியதாவது: தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி, பெண்கள் வேலைக்கு செல்லும் கட்டாய சூழ்நிலை பெரும்பாலான வீடுகளில் இருந்து வருகிறது. இதனால் பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். வேலைக்கு வரும் இடங்களில் பாலியல் ரீதியான துன்பங்கள் உள்பட பல இன்னல்கள் பெண்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற சமயங்களில் பெண்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். முடிந்தவரை தற்காப்பு கலைகள் கற்று கொள்ளலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும், தங்களின் போன் மூலம் தொல்லை கொடுப்பவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். உடனடி பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமான உதவிக்கு 181 என்ற எண்ணிற்கு போன் செய்தால், நீங்கள் இருக்கும் இடத்திற்கு உதவி செய்ய போலீசார் உள்ளிட்ட அலுவலர்கள் வருவார்கள். எதற்கும் அச்சப்பட வேண்டியது இல்லை. வேலைக்கு வரும்போது அல்லது வேலை முடிந்து வீட்டிற்கு போகும் போது, வழியில் டூவீலர் பழுது ஏற்பட்டால், அதை பயன்படுத்தி உங்களுக்கு தொந்தரவு கொடுக்க முயன்றால், பயப்பட வேண்டாம். உடனே 181 எண்ணிற்கு போன் செய்யுங்கள். உடனே போலீஸ் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். நூற்பாலையில் பணியாற்றும் பெண்கள் பெருமளவில் பங்கேற்று பயன் பெற்றனர்.
Next Story