விருத்தாசலத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலி

விருத்தாசலத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற டிரைவர் பலி
ஆத்திரத்தில் உறவினர்கள் விருதாச்சலம் புற காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
சேலத்திலிருந்து சிதம்பரம் நோக்கி ஒரு கார் ஒன்று விருத்தாசலம் வழியாக சென்று கொண்டிருந்தது. இந்த காரினை ஏற்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அவரது நண்பர்களான திருச்செங்கோட்டை சேர்ந்த பிரகாஷ், ஏற்காட்டைச் சேர்ந்த சரண்ராஜ் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இவர்களது நண்பர்களான விருத்தாசலத்தில் இருந்த ஒருவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக விருத்தாசலம் நகரப் பகுதி வழியாக இந்த கார் வந்து கொண்டிருந்தது. மணலூர் ரயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இராசலிங்கம் மகன் அறிவழகன் (வயது 25) என்பவர் மீது கார் மோதியது. இந்த விபத்தில் அறிவழகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மயங்கினார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய ரமேஷ் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பிரகாஷ், சரண்ராஜ் ஆகிய இருவரையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கிருந்து புற காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்ததும் கோமங்கலம் கிராமத்தை சேர்ந்த அறிவழகனின் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது அறிவழகன் இறந்து விட்டதாக தெரிந்ததும் ஆத்திரத்தில் அறிவழகனின் உறவினர்கள் சிலர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இருந்த காரில் வந்த பிரகாஷ், சரண்ராஜ் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். அப்போது பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கட்ராமன் அறிவழகனின் உறவினர்களிடமிருந்து பிரகாஷ், சரண்ராஜ் ஆகிய இருவரையும் மீட்க முயற்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த அறிவுழகனின் உறவினர்கள் புற காவல் நிலையத்தை அடித்து நொறுக்கினார்கள். இதில் புற காவல் நிலையத்தின் கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்கி விழுந்தது. அப்போது மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் பீதியில் உறைந்து அங்கும் இங்கும் ஓடினார்கள். உடன் தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் அறிவழகனின் உறவினர்களை சமாதானப்படுத்தி புற காவல் நிலையத்தை அடித்து நொறுக்கிய குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.
Next Story