மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா!
Thoothukudi King 24x7 |29 Sep 2024 6:50 AM GMT
தூத்துக்குடியில் மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமம் வழங்கும் விழா நடைபெற்றது. பதினான்கு கடலோர மாவட்டங்களைக் கொண்டுள்ள தமிழ்நாடு, கடல் மீன்பிடிப்பில் இந்தியாவில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 6000 த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்படகுகளை இயக்கும் மீனவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி தங்களுடைய அனுபவ அடிப்படையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து "படகு இஞ்சின் பராமரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மாலுமிக்கலை” என்ற தலைப்பில் 11 ஒருவார காலப் பயிற்சிகளில் மொத்தம் 380 மீனவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட மீனவர்களில் இதுவரை சுமார் 130 மீனவர்கள் படகு ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். இம்மீனவர்கள் 24 மீட்டர் ஒட்டு மொத்த நீளத்திற்கும் குறைவான நீளம் கொண்ட 240 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திரம் பொறுத்தப்பட்ட படகுகளை இயக்க உரிமம் பெற்றுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில்"படகு ஓட்டுநர் உரிமம்” வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 13 விசைப்படகு மீனவர்களுக்கு படகு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன.
Next Story