வெள்ள நீரை அப்புறப்படுத்த மின் மோட்டார்கள் தயார் : மேயர் அறிவிப்பு

வெள்ள நீரை அப்புறப்படுத்த மின் மோட்டார்கள் தயார் : மேயர் அறிவிப்பு
தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ள நீரை அப்புறப்படுத்த மின் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள நீரை அப்புறப்படுத்தும் மின் மோட்டார்களை தயார்படுத்தி சோதனை ஓட்டங்களை முடித்து தயார் நிலையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 76 மின் மோட்டார்கள் மற்றும் மாநகராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிறிய வகை பொக்லைன் இயந்திரத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் கூறுகையில் "வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நான்கு மண்டலங்களின் பகுதிகளிலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக பக்கிள் ஓடை மற்றும் ஒப்பாற்று ஓடை முழுமையாக தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதுபோல குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரி மழைநீர் தடையின்றி செல்வதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பருவமழை துவங்குவதற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் உறிஞ்சும் மின் மோட்டார்கள், பெரிய மோட்டார்கள் 13 உட்பட 76 மின் மோட்டார்களை சோதனை ஓட்டம் முடித்து மாநகர அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்களை இன்று ஆய்வு செய்துள்ளோம். ஒரு சில நாட்களில் தேவைப்படும் பகுதிகளுக்கு இந்த மோட்டார்களை அனுப்பி வைக்கப்படும் என மேயர் தெரிவித்தார். ஆய்வின் போது, ஆணையர் மதுபாலன், மாமன்ற உறுப்பினர்கள் முத்துவேல், ரிக்டா ஆர்தர், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story