குமாரபாளையத்தில் நடந்த நகரமன்ற கூட்டத்தில் முன்னாள் நகரமன்ற தலைவர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது
Komarapalayam King 24x7 |30 Sep 2024 1:16 PM GMT
முன்னாள் நகரமன்ற தலைவர் மறைவுக்கு நகர்மன்ற கூட்டத்தில் மவுன அஞ்சலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகர்மன்ற சாதாரண மற்றும் அவரச கூட்டம் நகரமன்ற தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் தனசேகரன் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: கவுன்சிலர்கள் கோவிந்தராஜ்,(தி.மு.க.) கனகலட்சுமி (சுயேட்சை)பேசுகையில், தங்கள் வார்டுகளில் குப்பைகள் எடுக்க ஆட்கள் வருவது இல்லை என புகார் கூறினார்கள். ஜேம்ஸ் (தி.மு.க.) : எங்கள் வார்டுகளில் குப்பைகள் எடுக்கவும், சாக்கடை சுத்தம் செய்யவும் ஆட்கள் வருவது இல்லை. கேட்டால் குப்பை அள்ளி செல்ல வண்டி இல்லை என காரணம் கூறி வருகிறார்கள். இதனால் கம்பளி பூச்சிகள் நிறைய வருவதால் பொதுமக்கள் பெரும் அவ்திகி ஆளாகி வருகிறார்கள். சுமதி (சுயேட்சை): எங்கள் வார்டில் குப்பை எடுக்க ஒரு ஆள் மட்டும் வந்தார். அவரும் இப்போது வருவது இல்லை. ராமமூர்த்தி (சுகாதார அலுவலர்): மாஸ் கிளீன் செய்யும் போது அனைத்து வார்டு பணியாளர்களும் சேர்ந்து தான் பணி செய்கிறார்கள். அப்போது மட்டும்தான் அவரை அழைத்து செல்வோம். மற்ற நாட்களில் அவர் உங்கள் வார்டில் தான் வேலை செய்து வருகிறார். பாலசுப்ரமணி (அ.தி.மு.க.) : சமுதாய கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் தொடங்காமல் உள்ளது. இதனை செயல்படுத்த வேண்டும். பிரதி மாதம் நகர்மன்ற கூட்டம் நடத்த வேண்டும். போன மாதம் ஏன் கூட்டம் நடத்தவில்லை? கூட்டம் நடத்தினால்தான் எங்கள் குறைகளை சொல்ல முடியும், பணிகள் தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடக்கும். மாதாமாதம் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் கமிஷனர். மேலும் மார்க்கெட் ஏலம் இன்னும் ஏன் நடத்தாமல் உள்ளீர்கள்? ஏலம் எடுக்க மனு கொடுக்க கூட தடை விதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன. ஏலம் எடுக்க வருபவர்களிடம் நகராட்சி நிர்வாகத்தினர் பெட்டியில் மனு போடக்கூடாது என கூறி வருவதாக புகார் வருகிறது. போலீஸ் வைத்து மார்க்கெட் ஏலம் நடத்தும் அளவிற்கு நகராட்சி மார்க்கெட் ஏலம் வந்துள்ளது. குமரன் ( கமிஷனர்) : புகார் இருந்தால் போலீசில் புகார் செய்யுங்கள். பிரதி மாதம் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மார்கெட் ஏலம் குறித்து எஸ்.பி. கூறியதையடுத்து, விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் சொல்லும் நகராட்சி அலுவலர் வசம் விசாரணை செய்யப்படும். கதிரவன் (தி.மு.க) : எங்கள் வார்டில் எல்.ஈ.டி. லைட் கேட்டு இருந்தேன். விரைவில் லைட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். எங்கள் வார்டில் பல பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்து கொடுத்தமைக்கு நன்றி. பரிமளம் (சுயேட்சை): எங்கள் வார்டு பகுதியில் பல பணிகள் குறித்து கோரிக்கை விடுத்தேன். இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதே நிலை நீடித்தால், நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது தவிர வேறு வழியில்லை. வெங்கடேசன் (தி.மு.க.)(நகர்மன்ற துணை தலைவர்) : தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டமைக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிற்கு நன்றி. எனது வார்டில் கூட எல்.ஈ.டி. விளக்குகள் கேட்டிருந்தேன். விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு விவாதங்கள் நடந்தது. பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story