விருத்தாசலத்தில் மயங்கி விழுந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
Virudhachalam King 24x7 |30 Sep 2024 5:26 PM GMT
டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததே சாவுக்கு காரணம் என உறவினர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்
விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் ரமேஷ் (வயது 35). இவருக்கு வசந்தி என்ற மனைவியும் மணிகண்டன் (17), ரகு (15) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான ரமேஷ் விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள ஒரு கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் வந்தது. மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை 3 மணிக்கு கொண்டு வந்தனர். மாலை 6:15 மணிக்கு ரமேஷ் திடீரென சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அறிந்த பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல், மாநில செயற்குழு உறுப்பினர் ஆசா வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் பாமகவினர், ரமேஷ் உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு அவரது பிரேதத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ரமேஷ் உறவினர்கள் கூறியபோது ரமேஷை நேற்று மதியம் 3:00 மணிக்கு கொண்டு வந்து சேர்த்தோம். மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். மாலை 6:00 மணி வரை டாக்டர்கள் வந்து ரமேஷுக்கு சிகிச்சை அளிக்கவில்லை. இறந்த பிறகு தான் டாக்டர்கள் ரமேஷை வந்து பார்த்தனர். டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்திருந்தால் ரமேஷை காப்பாற்றி இருக்கலாம், என தெரிவித்தனர். இது குறித்து அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போதுதான் ரமேஷ் பிரேதத்தை வாங்குவோம் என தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் பிரேதத்தை வாங்க மாட்டோம் என கூறிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story