தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம்
தலித் மக்கள் வீட்டடிமனைகளை அளந்து தரக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம்
தலித் மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டடிமனைகளை அளந்து தரக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அது பற்றிய விவரம் வருமாறு. தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தினமான செப்.30ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் மக்களின் நிலத்திற்கான நேரடி இயக்கத்தை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ளது. எம்.வாடிப்பட்டி. இந்த ஊரில் உள்ள அருந்ததியர் மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கொன்னம்பட்டியில் புல எண். 992,993-ஏ,994-3பி2 ஆகிய நிலத்தில் 3 சென்ட் வீதம் 42 குடும்பங்களுக்கு 1997ம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 ஆண்டு காலமாக நிலம் ஒப்படைதாரர்களுக்கு நிலத்தை அளந்து தராத நிலை உள்ளது. எனவே உடனடியாக பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைமையில் நேரடியாக நிலத்தில் இறங்கி கிராம மக்கள் தங்களுக்கு உரித்தான நிலத்தில் உள்ள செடிகொடிகளை, முட்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வத்தலகுண்டு அருகேயுள்ள அ.பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள இலவச வீட்டடி மனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச்செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச்செயலாளர் பி.செல்வராஜ், மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.ஆஸாத், சங்கத்தின் மாவட்டத்தலைவர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்டச்செயலாளர் கே.டி.கலைச்செல்வன், பொருளாளர் ஆர்.வனஜா, நிர்வாகிகள் கே.அருள்செல்வன், பேரா.சோ.மோகனா, இல.முருகேசன்,பி.சண்முகம், தமிழர் சமூக நீதிக்கழகத்தின் நிறுவனத்தலைவர் சுரா.தங்கபாண்டியன், தமிழ்புலிகள் கட்சியின் மண்டலப் பொருளாளர் மருதைபோஸ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன், ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் என்.பாண்டியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மாவட்டச்செயலாளர் பாப்பாத்தி, உள்ளிட்;ட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வத்தலகுண்டு சிபிஎம் ஒன்றியச்செயலாளர் தெய்வேந்திரன், நிலக்கோட்டை சிபிஎம் ஒன்றியச்செயலார் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு வாரத்திற்குள் நிலத்தை சுத்தம் செய்து கல் ஊன்றி அளந்து கொடுப்பதாக நிலக்கோட்டை தாசில்தார் தனுஸ்கொடி, தனிதாசில்தார் ஜெயக்குமார், ஆகியோர் தெரிவித்தனர். மேலும் மீதமுள்ள ஆதிதிராவிடர்கள் 42 குடும்பத்தினருக்கும் நிலத்தை அளந்து தருவதாக உறுதியளித்தார். இந்த பேச்சுவார்த்தையில் திண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் சேவுகம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
Next Story