பல்லடம் அருகே போலி தங்க பிஸ்கட்களை விற்பனை செய்ய முயற்சி செய்த கும்பல்
Palladam King 24x7 |2 Oct 2024 1:18 PM GMT
போலி தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல முயன்ற நாமக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடி உட்பட 14 பேர் கைது.
தேனி மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கருமலை, உத்தமபாளையத்தைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் மணிவண்ணன், பட்ராயன் என்பவரின் மகன் முருகன் மற்றும் பல்லடம் மகாலட்சுமி நகர் சேர்ந்த சிவன் என்பவரின் மகன் மாரியப்பன் நண்பர்களான மேற்கூறிய நான்கு பேரும், தங்க பிஸ்கட் வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக ஆன்லைனில் ஒரு பிஸ்கட் ஒன்று 500 ரூபாய் என்ற கணக்கில், ஐந்து தங்க பிஸ்கட்டுகள் வாங்கி, அவற்றை ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டனர். இதற்காக, ஈரோட்டைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த அர்ஜுன் ஆகிய புரோக்கர்களை நாடியுள்ளனர். பல்லடம் அடுத்த மகாலட்சுமி நகரில் வைத்து தங்க பிஸ்கட்டுகளை கைமாற்ற திட்டமிட்டுள்ளனர். புரோக்கர் சுரேஷ் மூலம் இந்த தகவல், இவரது நண்பரான நாமக்கல் சேர்ந்த பிரபல ரவுடி காசிராஜ் என்பவருக்கு தெரிய வருகிறது. இதையடுத்து காசிராஜ் அந்த தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டம் தீட்டினார். காசிராஜ் மற்றும் இவரது கூட்டாளிகள் விஜயகுமார், கோபிநாத், கிருஷ்ணன், சுரேஷ், ரகு, மணிராஜ் மற்றும் மணி ஆகிய எட்டு பேர் கொண்ட கும்பல் கைமாறும் தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டமிட்டு மகாலட்சுமி நகர் வந்துள்ளனர். இது குறித்த தகவல் பல்லடம் போலீசருக்கு தெரிய வர, மகாலட்சுமி நகரில் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து கார், இரண்டு கத்தி, ஹாக்கி பேட் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட ஐந்து பிஸ்கட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய 14 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சதுரங்க பட பாணியில் போலி தங்க பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய முயன்ற கும்பலும்,அதை பறித்துச் செல்ல திட்டமிட்ட பிரபல ரவுடி உட்பட 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story