மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட கிராம சபைக் கூட்டம்
போடிக்காமன்வாடி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், போடிக்காமன்வாடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பேசியதாவது;- தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு 6 முறை கிராம சபையைக் கூட்ட ஆணையிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்னையை உறுதிசெய்யும் பொருட்டு, ஊராட்சியின் வரவு – செலவுகளுக்கு ஒப்புதல் அளித்தல், கிராம வளர்ச்சிக்கு திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரங்கள் கிராம சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்ததெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, அந்ததந்த திட்டங்களுக்குரிய நிதி முழுமையாக பயன்படுத்தப்பட்டதா, பணிகள் முடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து, விவாதித்து, மேலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து திட்டமிடும் இடம்தான் கிராம சபைக் கூட்டம். அதன்படி, இக்கிராம சபைக் கூட்டத்தில், கிராம நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் 01.04.2023 முதல் 31.03.2024 வரையிலான 2023-2024-ஆம் ஆண்டு தணிக்கை அறிக்கைக்கு கிராமசபை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் முதலான பொருட்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கிராம வளர்ச்சிகளை மேம்படுத்திட தமிழக அரசு சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை பொதுமக்கள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் கிராமங்களையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், துாய்மை பாரத இயக்கம் சார்பில் 10 துாய்மைப் பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பாஸ்கரன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) நாகராஜன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் அனிதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் காயத்ரி, ஆத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி, உதவி இயக்குநர்(மீன்வளத்துறை) ஜனார்த்தனம், ஆத்தூர் வட்டாட்சியர் முத்துமுருகன், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போது பொண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி சசிக்குமார், துணைத்தலைவர் விஜய்பழனி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story