தேசிய மகளிர் ஆணையம்- நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவும் இணைந்து நடத்திய பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேசிய மகளிர் ஆணையம்- நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவும் இணைந்து நடத்திய பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் வட்டார பகுதியில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மகளிர் ஆணையமும் நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.குருமூர்த்தி உத்தரையின்படி , செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜி.கே. வேலுமயில் வழிகாட்டுதல்படி ராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் பகுதியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மகளிர் குழு உறுப்பினர்கள், ஆசிரியைகள், மகளிர் தன்னார்வலர்கள் என 60 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவின் வழக்கறிஞர்கள் ஆர். அகிலாண்டேஸ்வரி, சாஜ் ஆகியோர் பெண்களுக்கான அடிப்படை சட்டங்கள் குறித்தும், இலவச சட்ட உதவிகள் பெறுவதும் மற்றும் தேசிய மகளிர் ஆணையம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெண் காவல் நிலையங்கள் போன்ற அமைப்புகளை பெண்கள் எவ்வாறு அணுகுவது, எப்படி இலவச சட்ட உதவி பெறுவது, பெண்களுக்கான வன்முறை தடுப்புச் சட்டங்கள், பெண்களுக்கு சம வேலை, சம ஊதியம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள், பெண்களுக்கான புதிய பி.என்.எஸ் சட்ட பிரிவுகள் பற்றியும்,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல், சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் மன வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதை பற்றியும், பெண்களுக்கான அரசு நல உதவி திட்டங்கள் பற்றியும் சட்ட விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இறுதியாக சட்ட உதவி பாதுகாப்பு அமைப்பின் தலைமை ஆலோசகர் வி.ராமசெழியன் பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு சட்டங்கள் பற்றி, இன்றைய காலத்தில் பெண்கள் சமூக வலைத்தளங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இளநிலை அலுவலர் மு.இளையபாரதி தொகுத்து வழங்கி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story