பாசனத்திற்காக வைகை அணையில் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிப்பு
Andippatti King 24x7 |2 Oct 2024 3:31 PM GMT
செப்., 25ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது.
பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக நிலங்களுக்கு செப்., 15 வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1130 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நீர் திறப்பால் மதுரை மாவட்டத்தில் 98 ஆயிரத்து 764 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 6039 ஏக்கர் நிலங்கள் பலன் பெறுகிறது.வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.தற்போது இதற்கு முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. முறைப்பாசன அடிப்படையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முதல் போகத்திற்கு செப்., 25ல் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு மீண்டும் திறந்து விடப்பட்டது. இதனால் அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு வினாடிக்கு 1130 கனஅடியில் இருந்து 2030 கன அடியாக உயர்ந்துள்ளது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.நேற்று காலை அணை நீர்மட்டம் 57.61 அடியாக இருந்தது(அணை மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1569 கன அடியாக இருந்தது.
Next Story