நாமக்கல் கதர் மற்றும் கிராம பொருள் அங்காடியில் தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
Namakkal King 24x7 |2 Oct 2024 4:53 PM GMT
காதி கிராப்ட் பொருட்களை www.tnkvib.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் வாங்கலாம்.பொதுமக்கள் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற நெசவாளர்கள் மற்றும் கைவினை தொழில் புரிவோர்கள் பயன்பெறுவார்கள்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் காதி கிராப்ட் கதர் விற்பனை அங்காடியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர ச.உமா, காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து பேசுகையில்... இந்திய திருநாட்டின் இதயமாக விளங்கும் கிராமப்புற ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் உயரிய சேவையை முதற் குறிக்கோளாகக் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது. 2023-2024-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையின் போது ரூ. 92.00 இலட்சம் மதிப்புள்ள கதர் மற்றும் கிராம பொருள் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இம்மாவட்டத்திற்கு ரூபாய் 176.00 இலட்சம் மதிப்புள்ள கதர் ரகங்களை விற்பனை செய்திட தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.விற்பனை இலக்கினை முழுமையாக எய்திடும் பொருட்டு அனைத்து அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் எளிய கடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கதர் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களின் நலன் கருதியும் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30%-ம், குறிப்பிட்ட பட்டு ரகங்களுக்கு 50%-ம் மத்திய மாநில அரசுகளால் சிறப்புத் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கதரங்காடிகள் மற்றும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் துவக்கப் பட்டுள்ள தற்காலிக கதர் விற்பனை நிலையங்களில் பெருமளவில் கதர் ரகங்கள் வாங்குவதன் மூலம் கிராமப்புற ஏழை நூற்போர், நெய்வோர் வாழ்வில் ஒளி ஏற்றிடும்படி அரசுப் பணியாளர்கள் மற்றும் பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் அலகுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் தேன், குளியல் சோப்புகள் மற்றும் சலவைசோப்புகள், பத்தி, சாம்பிராணி, மெழுகுவர்த்தி, ஜவ்வாது, வலி நிவாரணி தைலம், ஷாம்பு மற்றும் காலணிகள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வகையான கிராமப் பொருட்கள் கதரங்காடியில் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் காதி கிராப்ட் பொருட்களை www.tnkvib.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமும் வாங்கலாம். பொதுமக்கள் கதர் கிராமத் தொழில் வாரியத்தின் மூலம் பொருட்களை வாங்கும் போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற நெசவாளர்கள் மற்றும் கைவினை தொழில் புரிவோர்கள் பயன்பெறுவார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயரும். எனவே, பொதுமக்கள் அரசின் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பேசினார்.
Next Story