தொழிலாளர்கள் வீடுகளுக்கே சென்று பணிக்கு திரும்புமாறு வற்புறுத்தும் சாம்சங் நிர்வாகம்
தொழிலாளர்கள் வீடுகளுக்கே சென்று பணிக்கு திரும்புமாறு வற்புறுத்தும் சாம்சங் நிர்வாகம்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆலை நிர்வாகம் பணிக்கு திரும்ப வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது இது தொடர்பான வீடியோ வெளியாகி தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் இந்தப் போராட்ட விவகாரத்தில் தமிழக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஐந்து முறை பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதனால் ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து 23 வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சாம்சங் நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் பணிக்கு திரும்ப வற்புறுத்தி வருவதாக தொழிலாளர்கள் பலரும் புகார் தெரிவித்து வந்தனர். நிர்வாகத்தின் இந்த செயலுக்கு சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும் கடந்த 27 ம் தேதி போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் மத்தியில் பேசிய மாநில செயலாளர் முத்துக்குமார் , தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்று, பணிக்கு திரும்ப வற்புறுத்துவதை, நிர்வாகம் நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் இது தேவையற்ற பிரச்சனையை உருவாக்க வழிவகை செய்யும், தொழிலாளர்களின் வீடுகளுக்கு செல்வது ஒரு நிர்வாகம் செய்யக்கூடாத குற்றத்தை செய்து வருவதாகவும், குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்த நிலையில் இன்று ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்கிற தொழிலாளியின் வீட்டுக்கே நேரில் சென்ற சாம்சங் ஆலையின் அதிகாரிகள் அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளனர். இதனை அருகில் இருந்து அவரது நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், உங்களுடைய உரிமையை கைவிட்டு நாங்கள் வர சொல்லவில்லை, தற்போது நீங்கள் போராட்டத்தில் ஈடுபடும் காரணத்தினால் தான் தொழிற்சாலை நிர்வாகம் ஆடி பணிந்து வருவதாக என்ன வேண்டாம். தானே தொழிற்சாலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்.,என குறிப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு பேரோட்டத்தில் ஈடுபட்டு வரும் ராம்குமார், தனது மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, இரண்டு நாள் விடுப்பில் இருந்தேன், அதன் பிறகு எப்போது வேலைக்கு வருவாய் என தன்னை கேள்வி மேல் கேள்வி எழுப்பி தன்னை வற்புறுத்தினார்கள்.என பதில் அளிப்பது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து சாம்சங் ஆலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்க முயற்சித்தபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை. இதுகுறித்து சாம்சங் தொழிற்சாலையில் உள்ள ஹெச். ஆர் பார்த்திபனை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதற்கு ; அந்த வீடியோ குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறி அழைப்பை துண்டித்து விட்டார்.