திருப்பூர், தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் சாமிநாதன் பேச்சு!
Tiruppur (North) King 24x7 |5 Oct 2024 11:30 AM GMT
திருப்பூர், தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பேசினார்.
திருப்பூர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆசிரியர்களுக்கான பாராட்டு விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றியம், அருள்புரத்தில் உள்ள திருமண மண்டபத்தில், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதற்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் க.ஈஸ்வரசாமி, மேயர் திரு.ந.தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: - தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த 2024ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. இந்த 100 சதவீதம் என்பது தொடர வேண்டும் என்பதுவே தமிழ்நாடு முதலமைச்சரின் விருப்பம் மற்றும் எனது விருப்பமும் அதுவே, அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் செயல்பாடுகள் இருக்க வேண்டும். மேலும், அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 100 சதவீதம் இலக்கை அடைய வேண்டும். முதலமைச்சர் நடவடிக்கையின் அடிப்படையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் தான் அதற்கு சாத்தியம். கல்வியில் மற்ற மாநிலத்திற்கே முன்மாதிரியாக நமது மாநிலம் இருந்து வருகிறது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது உயர்கல்விக்கு என தனியாக இலக்காவை உருவாக்கினார். மேலும். கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார்கள். சத்துணவில் வாரம் 3 நாட்கள் முட்டை வழங்கப்பட்டது. தொழிற்கல்வி படிப்பிற்கு நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 2023-2024 ம் கல்வியாண்டில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 23,841, தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 23,242. தேர்ச்சி சதவீதம் 97.45 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023- 2024 ம் கல்வியாண்டில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 30,180. தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 27,879, சதவீதம் தேர்ச்சி 92.38 சதவீதம் ஆகும் அதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகள் 154. தனியார் பள்ளிகள் 112 என மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 266. இதில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 1902. கடந்த 2023-2024 ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் மாநிலம் முழுவதும் 8 மாணவிகள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து மட்டும் 4 மாணவிகள் தமிழ் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 8 பேரில் 6 பேர் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவிகளும் ஒருவர் அரசு உதவி பெறும் பள்ளியை சார்ந்த மாணவியும் ஒரேயொரு அரசுப் பள்ளி மாணவி திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவி ஆவார். மீதமுள்ள 3 மாணவிகள் தனியார் பள்ளி மாணவியர்கள் ஆவார். 2023-2024 ம் கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 436. மருத்துவக் கல்லூரி சேர தகுதி பெற்றவர்கள் 245 பேர் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் மூலம் 38 மாணவர்கள் பயன்பெற்றுளார்கள். இதுவும் மாநிலத்தில் நமது மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு மற்றும் உயர்வுக்குபடி திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் தேர்ச்சி பெற்ற 10,126 மாணவர்களில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி படிப்பில் 9,849 மாணவர்களும் பிற பிரிவு பாடங்களில் 41 மாணவர்களும் 97.30 சதவீதம் உயர் கல்வியில் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 6,000 மாணவியர்களும், தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் 3,953 மாணவர்களும் கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், விலையில்லா சீருடைகள், விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், விலையில்லா வண்ணபென்சீல்கள், விலையில்லா புத்தகங்கள், விலையில்லா நோட்புத்தகம். விலையில்லா காலணிகள், காலுறைகள் மற்றும் கால் ஏந்திகள், இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா புத்தக பை, கணிதஉபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், சிறப்பு ஊக்கத் தொகை, கம்பளிச் சட்டைகள். மழையாடைகள் மற்றும் காலுறைகள், வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான நிதியுதவி, விலையில்லா கிரையான்கள் என எண்ணற்ற திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்பட்டு வருகிறது. ஆசிரியர்களின் கண்டிப்பு என்பது கூட மாணவர்களின் எதிர்கால நன்மைக்காகவே இருக்கும். மாணவர்களை கல்வியில் மேலும் மேலும் உயர தொடர்ந்து பணியாற்ற வேண்டும். கல்வி அழிவில்லாத சிறந்த செல்வம் என்ற திருவள்ளுவரின் கூற்றிக்கிணங்க, பெற்றோர்கள் சேமித்து வைத்த செல்வம் தொடரும் என கூற முடியாது. ஆனால் கற்ற கல்வி செல்வத்தை அழிக்கமுடியாது. வாழ்க்கையில் வழிகாட்டக்கூடியது கல்வி செல்வமே. இந்த அழியாத செல்வத்தை தந்து கொண்டிருக்கும் மாநிலத்திலேயே இதுபோன்ற நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற காரணமாக இருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டில் உயர் கல்வியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதற்காக உழைப்பை கொடுத்த ஆசிரிய பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களை உயர்ந்த நிலைக்கு உருவாக்கக்கூடிய பொறுப்பு ஆசிரிய பெருமக்களுக்கே உள்ளது. எந்த உயர் பதவிக்கு வருவதற்கு அடிப்படை காரணம் படிப்பு மட்டுமே. திருப்பூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் முதலிடம் பிடித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. மாநில அளவில் முதலிடம் என்பது பெருமையான ஒன்று. இதற்காக ஆசிரிய பெருமக்களின் கடின உழைப்பை தந்ததால் தான் திருப்பூர் மாவட்டத்திற்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் எங்களது பங்களிப்பை அளித்து ஆதிதிராவிட நலத்துறை மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது மனநிறைவை தந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் முழுமையாக சென்றடைய வேண்டும். பள்ளி கல்வி முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வி கற்க வேண்டும். ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் உள்ள அனைத்து திட்டங்களும் அந்த மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். திருப்பூர் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் முதலிடம் பிடிக்க 100 சதவீத பங்களிப்பை அளித்த அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார், தலைவர் (நந்தா கல்வி நிறுவனங்கள்) வெ.சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை) காளிமுத்து (திருப்பூர்). (தொடக்கக்கல்வி) தாமோதரன் (திருப்பூர்), ராஜாமணி (தாராபுரம்), உதவி திட்ட அலுவலர் அண்ணாத்துரை, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் கீர்த்தி சுப்பிரமணியம், பல்லடம் ஒன்றியக்குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், செயலர் (நந்தா கல்வி நிறுவனம்) திருமூர்த்தி, முதல்வர் ரகுபதி. தலைமையாசிரியர்கள். முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story