அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆய்வு.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பருவமழை காலம் தொடங்கி உள்ளது. நேற்றைய தினம் இராசிபுரம் பகுதியில் அதிகளவில் மழை பொழிவு இருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் உள்ள மருத்துவமனை இராசிபுரம் மருத்துவமனை மட்டும் தான். இம்மருத்துவமனையில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வகையான இலவச மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, மகப்பேறு கால சிகிச்சைகள் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக நீர்தேக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடந்த ஆண்டே இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பேறுகால முன் கவனிப்பு பகுதியில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக பேறுகால முன் கவனிப்பு பகுதி 20 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனையில் ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவு, பெண்கள் உள் நோயாளிகள் பிரிவு, பிரசவ பகுதி, குழந்தைகள் நலப் பிரிவு, தொற்றா நோய்கள் பிரிவு, சலவையகம், நீரேற்றும் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட்டுள்ளது. தேவைபடின் தரை தளத்தில் நோயாளிகளை முதல் தளத்திற்கு மாற்றிட தேவையான நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், பருவமழை காலங்களில் அரசு துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் ஓடைகள் தூர்வாரி மழைநீர் உடனடியாக வடியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் தொடர் கண்காணிப்பில் உள்ளது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. இராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தரைதளத்துடன் கூடிய 6 அடுக்கு மாடி வசதியுடன் நவீன மருத்துவ வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் மருத்துவமனை கட்டிட பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை காரணமாக நோய்தொற்று காணப்பட்டது. குறிப்பாக நாமக்கல் மாநகராட்சி, இராசிபுரம், நாமகிரிப்பேட்டை மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் நோய்தொற்று காணப்பட்டது. அதிகளில் நோய்த்தொற்று காணப்பட்ட பகுதிகளில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் தற்போது நோய்தொற்று கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்கள். இந்த ஆய்வில் இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story