பரமத்தி வேலூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் அணி வகுப்பு ஊர்வலம்.
Paramathi Velur King 24x7 |7 Oct 2024 1:57 AM GMT
பரமத்தி வேலூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூர், அக். 7: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் அணி வகுப்பு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பரமத்தி வேலூர் சிவா தியேட்டர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை நன்செய் இடையாறு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அணி வகுப்பு ஊர்வலம் நான்கு ரோடு பகுதியில் இருந்து தொடங்கி சந்தை பகுதி, சக்தி நகர், காமராஜர் சிலை, அண்ணா சாலை, திருவள்ளுவர் சாலை, பழைய பைபாஸ் சாலை வழியாக மீண்டும் நான்கு ரோட்டை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்க வட மாநில தலைவர் பேராசிரியர் மானனீய குமாரசாமி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றி பேசியதாவது:- தமிழகத்தில் மொத்தம் 57 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அணி வகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் தொடங்கியதில் இருந்து கடந்த 99 வருடங்களாக இந்த அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இந்து சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என்பதற்காக முன்னாள் பிரதமர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தி உள்ளிட்டோர் கூட ஆதரவு தெரிவித்தனர். இந்த இயக்கம் கடந்த 100 ஆண்டுகளாக பிளவு படாமல் ஒற்றுமையோடு செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் ஆல்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என மக்கள் உணர தொடங்கி உள்ளனர்.நாம் அனைவரும் சமுதாய நல்லிணக்கம், குடும்பத்தின் மேன்மை, சுற்று சூழல் பாதுகாப்பு, சுதேசிய தன்மை,குடி மக்கள் உரிமை மற்றும் கடமை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். சமுதாய உணர்வோடு, சமுத்துவ உணர்வோடு வாழ வேண்டும்.சுற்று சூழலை பாதுகாக்க வேண்டும். எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும். நாம் பேசும் மொழி தாய் மொழியாக இருக்க வேண்டும். உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும். கடமை உணர்வை மீறக் கூடாது. மாதா, பிதா, குரு தெய்வம் இது இந்து தர்மம், தேசத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசினார். கூட்டத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Next Story