தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் ஆர்வம்!
Thoothukudi King 24x7 |8 Oct 2024 12:27 PM GMT
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்று கிராம மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம் முள்ளக்காடு ஆகிய 7 ஊராட்சிகளை இணைக்க பரிந்துரை செய்து சமீபத்தில் தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இதற்கு சில கிராமங்களில் பொதுமக்கள் பெருமளவில் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் அ.சண்முகா புரம், அனந்த் நகர்,, அன்னை வேளாங்கண்ணி நகர், ஆரோக்கிய புரம், ஆசைத்தம்பி நகர், பாலதண்டாயுத நகர், பாரதி நகர், டேவிஸ்புரம், துரைசிங் நகர், கணபதி நகர், காந்தி நகர், கணேசபுரம், கோமாஸ்புரம், குருஸ்புரம், இந்திரா நகர், இருதயம்மாள் நகர், ஜேஜே நகர், ஜாஹிர் உசேன் நகர், ஜேசு நகர், ஜோதிபாசு நகர், கேவிகே சாமி நகர், கலைஞர் நகர், காமராஜ் நகர், காமராஜர் நகர் ரிக்ஷா காலனி, காமராஜபுரம், கருப்பசாமி நகர், கீலா அழகாபுரி, கொத்தனார் காலனி, குமரன் நகர், லெப்ராசி மருத்துவமனை, எம்ஜிஆர் நகர், மாதா நகர், மாப்பிள்ளையூரணி, மருதுவார் காலனி, மேளா அழகாபுரி, முத்து நகர், நேரு காலனி, புதிய முனியசாமி புரம், ஓம் சக்தி நகர், பெரிய செல்வம் நகர், பூபாண்டியாபுரம், ராஜபாளையம், ராம்தாஸ் நகர், சகாய மாத பட்டினம், சமீர்வியாஸ் நகர், சிலோன் காலனி, சிலுவைப்பட்டி, சுடலையாபுரம், த.சவேரியார் புரம், தாய் நகர், தாளமுத்து நகர், தெருக்கு சொத்தையன் தோப்பு, த்ரேஸ் நகர், குரல் நகர், வடக்கு சொத்தையன் தோப்பு, வண்ணாரப் பேட்டை, வெற்றி நகர், விவேகானந்தா காலனி ஆகிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. மாப்பிள்ளையூரணியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த அக்.2ஆம் நடந்த கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊர் தலைவர் பெத்துமுருகன் கூறுகையில், "மாநகராட்சி ஆக்குவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் இன்று வரை அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. மாநகராட்சி ஆன பின்னர் கிராமம் வளர்ச்சி அடையும், சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்றார். கிராமத்தைச் சேர்ந்த பொன்கிருஷ்ணன் என்பவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். சாலை வசதி போக்குவரத்து குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் சீராக கிடைக்கும். தற்போது எங்களுக்கு 25 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. பத்திரகாளியம்மன் குளத்தில் ஆள்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதில் இருந்து பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எனவே மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். செல்வராஜ் என்பவர் கூறுகையில், "கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை காரணமாகவும் குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மூன்றே நாட்களில் மழை நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ள நிலையில், மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 20 நாட்களுக்கு மேல் ஆகியும் மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை உடனடியாக மாநகராட்சி உடன் இணைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். டேனியல் என்பவர் கூறுகையில், "மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். ஆனால் அன்றாடம் பயன்படுத்தும் குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், கழிவு நீர் கால்வாய்கள், தெருவிளக்குகள் ஏதுமில்லை. அரசு பள்ளிகள் பராமரிப்பின்றி உள்ளன. பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் வசிக்கும். இந்த பகுதியில் ஒரு அரசு கல்லூரி இல்லை. இதை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்தினால் முடியாது. ஆகையால் உடனடியாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்றார். தங்கபாண்டியன் என்பவர் கூறுகையில், மாப்பிள்ளைளயூரணி தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் போது வார்டுகள் பிரிக்கப்படும். அப்போது குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் கிடைக்கும். எங்கள் கிராமத்தில் இருந்த விஏஓ அலுவலகம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போன்று அரசு துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பல கிமீ தொலைவில் ஆரோக்கியபுரத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. ஊர் பஞ்சாயத்திற்கு உட்பட பகுதியில் இடம் தருவதாக கூறியும் சிலரின் சுய லாபத்திற்காக வங்கி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.. இதுபோல் கிராம மக்கள் பலரும் மாநகராட்சியுடன் இணைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Next Story