தசரா திருவிழா: கிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதிஉலா!
Thoothukudi King 24x7 |9 Oct 2024 7:46 AM GMT
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 5-ம் நாளான நேற்று நவநீதகிருஷ்ணர் கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா சென்று அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்திபெற்ற தசரா திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலில் மாலை அணிந்து, பல்வேறு வேடங்கள் அணிந்து காணிக்கை வசூலித்து வருகின்றனர். திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முத்தாரம்மன் கோவில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு 8 வகையான கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு, யாகசாலை ஹோமம் பூஜையுடன் கும்ப கலசங்களில் இருந்து அம்மனுக்கு பால், மஞ்சள், விபூதி, தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து முத்தாரம்மன் அபிஷேக மண்டபத்தில் இருந்து நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story