சேந்தமங்கலம் ஈஸ்வரன் கோவில் தெப்பக்குளம் சீரமைப்பு பணி: பொன்னுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

சேந்தமங்கலத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் தெப்பக்குளம் சீரமைப்பு பணிகளை பொன்னுசாமி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்தில், 10வது வார்டில், ஈஸ்வரன் கோவில் அருகில் அமைந்துள்ள தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் சுகாதார சீர்கேடுடன் நோய் பரப்பும் வகையில் உள்ளது.ஆயிரம் ஆண்டு பழமையான சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் முன் அமைந்துள்ள தெப்பக்குளத்தில், கோவில் திருவிழாவின் போது முக்கிய நிகழ்ச்சியாக சுவாமி தெப்பம் விடும் நிகழ்ச்சி, கடந்த, 60 ஆண்டுக்கு முன் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது.இந்த விழாவை காண சேலம், நாமக்கல், காளப்பநாய்க்கன்பட்டி, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் திரண்டு வருவர். இந்த குளத்தில் டவுன் பஞ்சாயத்து கழிவுநீர் கால்வாய் மூலம் நேரடியாக கலக்கிறது. இதனால் திருக்கோயிலின் தெப்பக்குளம் மிகவும் பாழ்பட்டு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பழமையான திருக்கோயில் தெப்பக்குளம் சுகாதார சீர்கேடு மேலோங்கி, நோய் பரப்பும் வகையிலும் பாதுகாப்பற்ற முறையிலும் உள்ளது.இந்த குளத்தை தூர்வாரி சீரமைத்து கொடுக்க வேண்டும் என சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த, தமிழக பொது கணக்கு குழுவினரிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டாக்டர் பாலாஜி மற்றும் பொதுமக்கள் மனு அளித்தனர். குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ தெரிவித்தார். இதையொட்டி அந்த குளத்தை ரூ. 1.38 கோடி மதிப்பீட்டில் சீரமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தெப்பக்குளம் முதற்கட்ட மேம்பாட்டு பணிக்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதையொட்டி, தெப்பக்குளம் சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி விழாவில் கலந்துகொண்டு சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். சேந்தமங்கலம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் வனிதா, சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், டவுன் பஞ்சாயத்து திமுக செயலாளர் தனபால், டாக்டர் பாலாஜி, பெரியசாமி, சாய் பாலமுருகன், சௌகார் பாஷா, விஜயன், மோகன், ஜெயச்சந்திரன், பிரவீன் உள்ளிட்ட திரளான பொது மக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story