ஆதரவற்ற கைவிடப்பட்ட பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு!

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் அரசின் திட்டங்களில் பயன்பெற 100 சதவிகிதம் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் பதிவு செய்திட வேண்டும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, வேண்டுகோள்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சாலை, கோஸ்டல் ரெசிடென்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், சமூக நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் மூலம், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்திடவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் பெற்று பயனடையும் வகையில் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்நலவாரியத்தின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள், ஓய்வூதியம், தற்காலிக தங்கும் இடம், திறன் வளர்ப்பு பயிற்சி, சுய தொழில் மானியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் 100 சதவிகிதம் நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் திட்டங்களை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டு, தங்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட முன்வர வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் கல்வி ஒன்றே ஒருவரது விலைமதிப்பு மிக்க சொத்து மற்றும் சமுதாயத்தில் திறம்பட செயல்பட கல்வி முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், உயர்கல்வி பயில மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமை பெண்திட்டம், மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம், உயர்கல்வி வழிகாட்டிட நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், சமூக நலத்துறை சார்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு பொருளாதார உதவி, பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட மானியத்துடன் தொழில் கடனுதவி, திருமண நிதியுதவி, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய விதவைகள், ஆதரவற்ற பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், வளரிளம் பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்கள் தங்கி பயில சேவை இல்லங்கள், பணிபுரியும் பெண்களுக்கு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி, பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர்கள், குறுகிய கால பயிற்சி பெறும் மகளிர் மற்றும் வேலை நிமித்தமாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் மகளிருக்கு தோழி அரசு மகளிர் தங்கும் விடுதி செயல்படுத்தப்பட்டு வருகிது. தோழி அரசு மகளிர் தங்கும் விடுதியில் தங்கிட tnwwcl.in இணையதளம் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிட ஒருகிணைந்த சேவை மையம் மூலம் மருத்துவ உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நீங்கள் அனைவரும் மனம் தளராது அரசின் திட்டங்களை பயன்படுத்தி சிறப்பான பாதையை நோக்கி சென்று வெற்றி பெற வேண்டும். அரசின் திட்டங்களை பெற தேவையான ஆவணங்களை பெற இ-சேவை மையங்களில் பதிவு செய்து பெற்றிட வேண்டும். அனைவரும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய அட்டைகளை பெற்று பயன்பெற வேண்டும். மேலும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், பெண் குழந்தை திருமணத்தை தடுத்திட அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குழந்தை திருமணம் குறித்த புகார்கள் அளிக்க 1098 எண்ணில் விபரம் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விபரம் இரகசியமாக பாதுகாக்கப்படும். பெண்களுக்கு தேவையான உதவிகள் பெற 181 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர இ-சேவை மையம், கைபேசி அல்லது கணினி மூலமாக www.en.widowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு பல்வேறு பெண்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் செயல்பட்டு வரும் செங்கல் தயாரிப்பு நிறுவனத்தை பார்வையிட்டு, செங்கல் விற்பனையை தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்கள். இக்குழுவினரிடமிருந்து கலைஞர் கனவு இல்லம் வீடுகள் கட்டும் பணிகளுக்கு செங்கல் பெறப்பட உள்ளது. எனவே, பெண்கள் தங்கள் திறமையை மேம்படுத்தி கொண்டு தொழில் முனைவோர்களாக உருவாகி பலருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும். தங்கள் பகுதியில் விளையும் பொருட்களை சந்தைபடுத்திட தேவையான ஆலோசனைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் அனைவரும் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்களை அனைத்தையும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைவரும் பெற்று பயன்பெறும் வகையில் அரசு துறையினர் பணியாற்றி வருகின்றார்கள். பெண்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு, பிறருக்கு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் வீ.சகுந்தலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) என்.எஸ்.ராஜேஸ்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு ஆர்.அகிலாண்டேஸ்வரி, நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலர் சசிகலா, நாமக்கல் மகளிர் அதிகார மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி மகாலெட்சுமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story