நாமக்கல்லில் ரத்தன் டாடா மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி!

நாமக்கல் - பூங்கா சாலையில் ரத்தன் டாடாவின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரபல இந்திய தொழில் அதிபர் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்றிரவு சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி (அக்டோபர் 10 )நள்ளிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்தார்.அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள், பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல், பஸ் நிலையம் அருகில் உள்ள பூங்கா சாலையில் பல்வேறு தனியார் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் ரத்தன் டாட்டாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் டாடா குழும நிறுவனங்களில் பல்வேறு பிரிவுகளில் பணிப்புரியும் அதிகாரிகள், அலுவலர்கள், இன்ஸ்சூரன்ஸ் ஏஜெண்ட்கள், டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ரத்தன் டாடாவின் உருவப்படத்திற்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
Next Story