கடமைக்கு நடந்த பேரிடர் மீட்பு செயல்விளக்க முகாம்
Komarapalayam King 24x7 |11 Oct 2024 12:10 PM GMT
குமாரபாளையத்தில் பேரிடர் மீட்பு செயல்விளக்க முகாம் கடமைக்கு நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் தாசில்தார் சிவக்குமார் நேற்று மாலை 04:00 மணியளவில் நடப்பதாக பொதுநல ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 05:00 மணி நெருங்கும் சமயத்தில் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர். அதன் பின் காவிரி ஆற்றங்கரையில்தான் செயல்விளக்க முகாம் நடக்கவுள்ளது என, தெரிவிக்கப்பட்டு, அனைவரும் பாலக்கரை, பழைய காவேரி பாலம் அருகே அண்ணா நகர் பகுதிக்கு சென்றனர். அதன்பின் தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் வந்து சேர்ந்தனர். காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நபரை காப்பாற்ற, ரப்பர் படகு கொண்டு வந்தனர். அதனை தீயணைப்பு படையினர் இருவர், தன் காலால் காற்றடிக்கும் கருவி கொண்டு காற்று நிரப்பினர். இது சுமார் 40 நிமிடம் நீடித்தது. இருள் சூழும் நிலையில், அங்கிருந்த ஒருவரை ஆற்றில் இறங்க சொல்லி, அவரை மீட்பது போல் இரவில் நாடகம் நடத்தி காண்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள 10 நபர்களுக்கு குறைவானவர்கள் மட்டும் பார்த்தனர். பொதுமக்கள், அண்ணா நகர் குடியிருப்புவாசிகள் என யாரையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைக்கவில்லை. பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு இல்லை. 10 பேர் மட்டும் பார்க்கும் வகையில் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியால் யாருக்கு பயன்? என வந்த நபர்கள் புலம்பியபடி சென்றனர். தீயணைப்பு படையினர் வைத்துள்ள ரப்பர் படகு காற்றடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லும் நபரை, காப்பாற்ற இது போன்ற படகு கொண்டு வந்து, அதனை காற்றடித்து ஆற்றில் இறங்கி காப்பாற்றும் வரை, அந்த நபரின் நிலை என்னவாகும் எனவும் வந்திருந்தவர்கள் கேட்டுகொண்டனர். தீயணைப்பு படையினருக்கு, ஆபத்தில் உள்ள நபர்களை எளிதில் மீட்க உரிய படகு வழங்க, மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story