திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள்!
Thoothukudi King 24x7 |12 Oct 2024 12:32 PM GMT
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சனிக்கிழமையை முன்னிட்டு இன்று பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் குடும்பத்தில் சகல பாவங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் பெருமாள் கோவில்களில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக் கிழமைகளில் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 4-வது சனிக்கிழமை விழா கோலாகலமாக நடந்தது. அருள்மிகு சுப்பிரமணியசாமி மகமை அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5 மணிக்கு கோ பூஜை, 5.15க்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு துளசி மற்றும் 7 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழாவில், சுப்பிரமணியசாமி மகமை அறக்கட்டளை செயலாளர் எம்.எஸ்.எஸ்.கந்தப்பன், கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர் மந்திரமூர்த்தி, தொழில் அதிபர் கே.ஏ.பி.சீனிவாசன், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் நடத்தினார். இன்று இரவு 11 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story