நங்கவரம் பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியும், வடிகால் வாரிகளை சரிவர தூர்வாரப்படாததாலும் ஆக்கிரமிப்புகளாலும் மழைநீர் விளைநிலங்களிலும் தேங்கி நின்றன. நங்கவரம் பகுதியில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் மழை நீர் விளைநிலங்களில் புகுந்தும், அருகில் உள்ள வீடுகளில் புகுந்தும் இருந்தன. நங்கவரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பத்திரப்பதிவு ஆணையருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நங்கவரம் பகுதியில் வெங்கடேசா நகர், ஒத்தக்கடை பகுதியில் விளை நிலங்களில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பனையூர் காட்டுவாரி மற்றும் தென்கடை குறிச்சி பகுதியில் மழைநீர் வீடுகளுக்கு புகுந்த பகுதியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து குமாரமங்கலம் கிராமத்தில் மழையினால் கூரை வீட்டு சுவர் இடிந்து போனதை நேரில் பார்வையிட்டு உரிமையாளருக்கு நிவாரணத் தொகை ரூபாய் 8000 வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ, வட்டாட்சியர் இந்துமதி, ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணன், உதவி பொறியாளர் பத்மாவதி, நங்கவரம் பேரூராட்சி தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் அன்பழகன், குறிச்சி விவசாயி சக்திவேல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story