அரசு ஊழியர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

அரசு ஊழியர்களை மிரட்டினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
வருவாய்த்துறை மற்றும் பிற துறையினர் அரசு பணி செய்விடாமல் தடுப்பது, மிரட்டல் மற்றும் அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா., எச்சரிக்கை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைகிணங்க, அரசின் திட்டங்கள் அனைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகோடி மக்களையும் சென்றடையும் வகையில் வருவாய்த்துறை மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மக்கள் குறைத்தீர்க்கும் நாள், விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள், நுகர்வோர் குறைத்தீர்க்கும் நாள், மக்கள் தொடர்பு திட்ட முகாம் போன்ற முகாம்கள் பொதுமக்களின் இல்லம் தேடி அரசு அலுவலர்கள் சென்று அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில் வருவாய் மற்றும் பிற துறைகள் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, கிராமப்புற மற்றும் நகர்புற மக்கள் பயனடையும் வகையில் சுமார் 44 தனிமனித சேவைகள் வழங்க மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டது. இதுபோல் எண்ணற்ற முகாம்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், சட்ட விரோதமாக கனிமங்கள் வெட்டப்படுவதை தடுத்தல், புறம்போக்கு நிலங்களில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளை கணக்கீடு செய்தல், அவற்றை அகற்றுதல், புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுவதை தடுத்தல், நில அளவைப் பணி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு, வருவாய் வசூல் சட்ட விசாரணைகள், நெடுஞ்சாலைகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களுக்கு நிலஎடுப்பு செய்யும் பணிகள், பொது விநியோகத்திட்ட அரசுப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்துதலை தடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை கால, நேரம் பாராமல் (24/7) மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை செய்து வரும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், நில அளவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் பிற பணிகளை மேற்கொண்டு வரும் பிற துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை சட்டத்திற்கு புறம்பாக அரசுப் பணியினை செய்ய விடாமல் தடுத்தும், மிரட்டியும், அச்சுறுத்தியும், அவர்களை தாக்கியும், அவர்களது உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட சட்ட விரோத நடவடிக்கைளில் ஈடுபடுதல் அல்லது ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உடனடியாக எவ்வித தயக்கமுமின்றி காவல் துறையின் மூலம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய சட்டப் பிரிவுகளின் கீழ், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொது மக்களின் குறைகளை களைந்து மக்கள் நலனுக்காகவே அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் (24/7) பணியாற்றுகின்றனர் என்பதை பொது மக்கள் உணர்ந்து, அரசுப் பணிகளை மேற்கொள்ளும் வருவாய்த்துறை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story